உலகத்தை ஆளும் இளம்புயல்!
உலக நாடுகள் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கென்று சொல்லிக் கொள்ளதான் ஒரு நாடு இல்லை கண்களில் கனவுகளும் ஏக்கங்களும் மின்ன பேச ஆரம்பிக்கிறார் கி.செ.துரை. ஆனால், உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளப்போகிறான் தமிழன். இது என் கனவு மட்டுமல்ல. திருமூலரும், திருவள்ளுவரும் கூட இதைதான் சொன்னார்கள் என்கிறார் துரை. டென்மார்க்கில் வசிக்கும் இந்த இலங்கை தமிழர், தனது கனவை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் இளம் புயல். உலகத்தை தமிழால் வாழ வைப்போம் என்பதுதான் படத்தின் மையக்கரு. இன்டர்நெட் மூலம் உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர பாடுபடும் ஒரு இளைஞன் ஒரு தனி தீவில் தனது திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். இதை தடுத்து அழிக்க நினைக்கும் வில்லன், செயற்கை சுனாமியை உருவாக்கி அந்த தீவையே மூழ்கடிக்க நினைக்கிறான். வில்லனின் யுக்தியை முறியடிக்கிற ஹீரோ எப்படி தனது லட்சியத்தை நனவாக்கினார் என்பது முடிவு. தொண்ணூறு சதவீத படத்தை டென்மார்க்கில் எடுத்திருக்கிறார் துரை. அங்கே ஐநூறுக்கும் மேற்பட்ட குட்டி தீவுகள் இருக்கிறதாம். அதில் ஒரு தீவை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய வள்ளுவர் சிலையையும் அங்கே நிர்மாணித்திருக்கிறார் படப்பிடிப்புக்காக. மீதியுள்ள பத்து சதவீத படப்பிடிப்பு விருதுநகர் அருகில் உள்ள கிராமத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஹீரோவாக நடித்திருக்கும் வசந்த், மற்றும் அவரது நண்பர்களாக நடித்திருக்கும் சிந்துராஜ், ரவிஷங்கர் ஆகியோர் டென்மார்க்கை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள் பூர்ணிதா, சுஜிபாலா ஆகியோர். காமெடிக்கு கருணாசும், வில்லனாக ஸ்ரீமனும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு கிச்சாஸ், நடனம் காதல் கந்தாஸ், சண்டைப்பயிற்சி அனல் அரசு, எடிட்டிங் சதீஷ் குரோசோவா என்று முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களை தமிழகத்திலிருந்து தேர்வு செய்திருக்கும் துரை, ஜூன் மாதம் இளம் புயலை வெளியிடும் முடிவில் இருக்கிறார். கதை, திரைக்கதை, பாடல்கள், இயக்கம் என்று நான்கு வேலைகளை ஏற்றுக் கொண்டிருக்கும் துரை, நான்கு திசைகளில் மட்டுமல்ல… எட்டு திசைகளும் பேசப்படுகிற ஒரு இயக்குனராக வர வாழ்த்துவோமே!
Source: www.koodal.com
(02 Apr 2008)